பொய். மனதில் இருக்கும் மகாத்மா விழித்துக் கொண்ட போதெல்லாம் பொய் பற்றிய சிந்தனை சற்று அதிகமாகவே இருக்கும். சத்திய சோதனைப் படித்தப் பின்பும், ஹரிச்சந்திரக் கதைக் கேட்டப் பின்பும் இரண்டு மூன்று நாளைக்குச் சத்தியசன்தனைப் போல் வேடம் போடமுயலும் இந்த மனது.
பொய் என்றால் என்ன என்று சற்று சிந்தித்துப் பார்த்தேன். உண்மைக்கு மாறான விஷயங்களைப் பேசுவது என்று ஒரு பொதுவான விளக்கத்தைப் பார்க்கலாம். சில சமயங்களில் உண்மையை மறைப்பதும் பொய் எனக் கருதப்படுகிறது. சரி, பொய்ப் பற்றி என்ன திடீர் விசாரிப்பு என்றால் அதற்குக் காரணம் சென்ற வாரம் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம்.
மென்பொருள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் அளிக்கும் ஒரு நிறுவனத்தின் உயர் மேலாளர் (அதாவது நான் பணிபுரியும் நிறுவனம்) தனது வாடிக்கையாளரிடம் ஒரு மென்பொருளை செயல்படுத்திக் காட்டி அதன் அம்சங்களை விளக்கும் ஒரு சந்திப்பு. அந்தச் சந்திப்பின் போது என்னை மென்பொருளின் ஒரு சில செயல்பாடுகளை விவரிக்கும்படி உத்தரவு.
ஒருவழியாக எல்லாம் முடியும் தருவாயில் மேலாளர் தனது வியாபாரத் தந்திரத்தை கையில் எடுத்தார். சற்றே அரைகுறை நிலைமையில் உள்ள ஒரு (மென்)பொருளை, இதை நீங்கள் முழுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர மூன்று அல்லது நான்கு வாரங்களே போதும், எல்லாம் தயார் நிலையில் உள்ளது என்று போட்டாரே ஒரு போடு. இது ஒரு அப்பட்டமான பொய் என்று அங்கு இருந்த எல்லோருக்கும் புரிந்தது. என்னைப் பார்த்து வேறு என்ன மூன்று வாரங்கள் போதாது? என்று கேள்வி கேட்டார். அடடா இது என்ன நமக்கு வந்த சோதனை இது தான் சத்திய சோதனையோ? அவர் குறிப்பிட்ட நேரம் போதும் என்றால் அருகில் இருக்கும் வாடிக்கையாளர் என்னைக் கீழ்த்தரமாகப் பார்ப்பார், இன்னும் அதிக அவகாசம் வேண்டும் எனக் கூறினால் மேலாளரைப் பகைத்துக் கொள்ள வேண்டியதாய்ப் போய்விடும். சத்யம் வத(உண்மையே பேசு) , சத்யமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் போன்ற வாசகங்கள் கண் முன்னே வந்து போயின. நானோ சற்று நெளிந்து ஏதேதோ சொல்லி சமாளிக்க வேண்டியதாகி விட்டது. அப்படிச் சொன்னது நேரிடைப் பொய்யாக இல்லாமல் விவாதத்திற்குரியதாகப் போயிற்று.
இங்கே சொல்லப்பட்டது உண்மைக்குப் புறம்பான விஷயமாக இருந்தாலும் அது ஒரு வியாபார உத்தியாகப் பார்க்கப்படுகிறது. ஆக ஒவ்வொரு பொய்யும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்தே உபயோகப்படுத்தப்படுகிறது. அது சுயநலத்தினாலும், சொந்த விருப்பு வெறுப்புகளின் பேரிலும், வியாபார முன்னேற்றத்திற்காகவும் இப்படி பல விஷயங்களுக்காக உபயோகப் பட்டாலும் இறுதியில் அது உண்மைக்குப் புறம்பான பொய் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இப்படிப்பட்ட ஒரு சமூக சூழலில் சத்தியம் மட்டுமே உள்ள ஒரு உலகைக் கற்பனைச் செய்வதும், வாழ்க்கை நடைமுறையிலும் சத்தியம் சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை?
பி.கு. இங்கு குறிப்பிடப்பட்ட நிகழ்வில் எனக்கு நேரிடையாகப் பயன் இல்லாத காரணத்தினால் கூட பொய்யின் பயன்பாடு பற்றி ஒரு மாற்றுச் சிந்தனை எழுந்திருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment